(CICT) 2025-27 ஆம் ஆண்டிற்கான முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த ஆய்வாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
செம்மொழித் தமிழின் பெருமையை உலகறியச் செய்யவும், அதன் ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்லவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT) 2025-27 ஆம் ஆண்டிற்கான முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த ஆய்வாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
உதவித்தொகை விவரங்கள்:
தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ. 30,000 உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும், ஆண்டுதோறும் ஆய்வுச் செலவுகளுக்காக ரூ. 18,000 வழங்கப்படும்.
தகுதி நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் (UGC) 2 (F) மற்றும் 12 (B) அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வில் முழுநேர மாணவராகப் பதிவு செய்திருக்க வேண்டும். இலக்கியம், மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், தொல்லியல், கல்வெட்டியல், இசையியல், நிகழ்த்துக்கலைகள், நாட்டுப்புறவியல், வரலாறு போன்ற துறைகளில் முதுகலைப் பட்டத்தில் 55% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு 5% மதிப்பெண்கள் வரை தளர்வு அளிக்கப்படும்.
முனைவர் பட்ட ஆய்வானது, செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் வரையறுத்துள்ள கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 41 செவ்வியல் நூல்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 30.04.2025 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகளும், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு ஐந்து ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்ப நடைமுறை:
விண்ணப்பதாரர்கள் தங்கள் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு குறித்த 15 பக்க ஆய்வறிக்கையை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். ஆய்வுக்கட்டுரைகள் அல்லது நூல்கள் ஏதேனும் வெளியிடப்பட்டிருந்தால், அவற்றையும் விண்ணப்பத்துடன் இணைக்கலாம். விண்ணப்பதாரர்களின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் உதவித்தொகைக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பிறந்த நாள், சாதி, கல்வித் தகுதி மற்றும் முனைவர் பட்டப் பதிவு போன்ற சான்றிதழ்களின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பப் படிவத்தை APPLY LINK என்ற நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 19.05.2025 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பதிவாளர்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,
செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம்,
சென்னை - 600100.
இந்த உதவித்தொகை திட்டம், செம்மொழித் தமிழ் ஆய்வில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும். தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச் செய்யும் ஆய்வுகளை மேற்கொள்ள இது ஒரு சிறந்த களம்.